செவ்வாய், 23 ஜூன், 2009

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! - கவிஞர் தாமரை



ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
…………………………………………………………………………….
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

ஆக்கம் : கவிஞர் தாமரை

1 கருத்து:

  1. madam, your curse only has blocked the rains in TAMILNADU. nO regrets we have to suffer for the genocide acts caused by our country, to thousands of innocent civilians in that country

    பதிலளிநீக்கு